வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 29) என்பவர், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த சில ஆண்டுகளாக, குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த 33 வயது பெண்ணுடன் அவரது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில், அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், சமீப காலமாக அந்த பெண், ஜெயபிரகாசுடன் தொடர்பை துண்டிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இது ஜெயபிரகாசுக்கு கோபத்தையும், மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜெயபிரகாஷ், “ஏன் என்னை ஒதுக்குகிறாய்..?” என கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் சண்டை வெடித்துள்ளது. பின்னர், இது மோதலாக மாறிய நிலையில், திடீரென ஜெயபிரகாஷ் தனது அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரை பல இடங்களில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அந்த பெண்ணை அங்குள்ளவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் பேரில், ஜெயபிரகாசை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.