உக்ரைனுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கா ஏற்கனவே 25% வரி விதித்திருந்தது. இப்போது அதற்கு மேலாக மேலும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் 40% க்கும் அதிகமான பகுதி ரஷியாவிலிருந்தே பெறப்படுகிறது. இதனால், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு, இந்தியாவுக்கு பெரிய பொருளாதார சவாலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியாக, இந்தியாவின் லிவ்லி ப்ரொஃபஷனல் யுனிவர்சிட்டி (LPU) நாடு தழுவிய ‘சுதேசி 2.0’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் சென்சலர் டாக்டர் அசோக் குமார் மித்தல், கோகோ கோலா போன்ற அமெரிக்க குளிர்பானங்களை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
நமது முன்னோர்களால் காலனித்துவ ஆட்சியின் கீழ் பிரிட்டிஷ் பொருட்களை நிராகரிக்க முடிந்தது என்றால், இன்று நம்மால் ஏன் அதைச் செய்ய முடியாது? அமெரிக்கா இந்தியாவின் வலிமையையும் உறுதியையும் குறைத்து மதிப்பிட்டுள்ளது. உறுதியாக பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று அவர் கூறினார். அமெரிக்கா, இந்தியாவின் மதிப்பை குறைக்கும் வகையில் நடந்து கொள்கிறது என குற்றம்சாட்டிய அவர், “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டு இருக்கின்றன.
அதே சமயம், இந்தியாவை அநியாயமாக குறிவைத்து வருகிறது. அவர்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இத்தகைய சூழ்ச்சிகளை செய்கின்றனர்” என தெரிவித்தார். சமூக ஊடகங்களில் அவர் விடுத்த ஒரு கடுமையான அறிவிப்பில், “அமெரிக்கா 50% வரிகளுடன் தொடர்ந்தால், LPU அமைதியாக இருக்காது.” என எச்சரித்துள்ளார். 40,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட LPU இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.