தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை 15 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகள் அனைத்திலும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்களிடமிருந்து பெரும்பாலும், மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுவரை நடைபெற்ற முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்ததாக தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் பெருமளவில் மனுக்கள் மிதப்பதை பொதுமக்கள் கண்டனர். உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் பெற்ற போலீசார், ஆற்றில் மிதந்த மனுக்களை சேகரித்து, அவற்றை யார் வீசியது என்பதற்கான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையில், கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அரசு மக்கள் நலனுக்காக தொடங்கிய முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் அலுவலர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், அவை ஆற்றில் மிதந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆற்றில் மிதந்த மனுக்களுக்கு இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் எதிர்கட்சிகள் உட்பட பலரும் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.
Read more: கோகோ கோலா போன்ற அமெரிக்க குளிர்பானங்களுக்கு தடை.. ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த LPU..!!