ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான லலித் மோடி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைவதைக் காணலாம். இந்த வீடியோ 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் சீசனில் எடுக்கப்பட்டது, அப்போது மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பைச் சேர்ந்த ஸ்ரீசாந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். கிரிக்கெட் உலகையே உலுக்கியிருந்தாலும் இந்த சம்பவத்தின் காட்சிகள் இதுவரை வெளியாகவில்லை. இந்தநிலையில், தற்போது, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, லலித் மோடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை Slap-Gate சர்ச்சை என பொதுவாக அழைப்பார்கள். அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின்போது இச்சம்பவம் நடந்திருக்கிறது. போட்டி முடிந்த பின்னர், வீரர்கள் கைக்குழுக்கிக் கொண்டபோது, ஹர்பஜன் சிங் தனது புறங்கையால் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து பேசிய லலித் மோடி, “போட்டி முடிந்துவிட்டது. அனைத்து கேமராக்களும் அணைக்கப்பட்டுவிட்டன. ஒரே ஒரு பாதுகாப்பு கேமராவில் மட்டுமே அந்த சம்பவம் பதிவானது. ஹர்பஜன் ஸ்ரீசாந்திடம், ‘இங்கே வா’ என கூப்பிட்டு புறங்கையால் கன்னத்தில் அறைந்தார்” என விவரித்தார்.
2008ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி அன்று மொஹாலியில் நடந்த போட்டியின்போதே இச்சம்பவம் நடந்தது. அந்த போட்டியில் பஞ்சாப் 66 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அந்த போட்டியில் சச்சின் இல்லாத நிலையில், ஹர்பஜன் சிங் கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார். வெற்றிக்கு பின் ஸ்ரீசாந்த் சிரித்துக்கொண்டே ஹர்பஜன் சிங்கிடம் “Hard Luck” என சொல்லியுள்ளார். இது அவரை இன்னும் கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும் ஷான் பொல்லாக்கை அவுட்டாக்கிய பின் ஸ்ரீசாந்த் ஆக்ரோஷம் காட்டி உள்ளார். மேலும், ராபின் உத்தப்பா உடன் மோதி உள்ளார். இவை அனைத்தும் ஹர்பஜனுக்கு தலைக்கேறி அவர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பல ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் உடனான யூ-ட்யூப் உரையாடலின்போது பேசிய ஹர்பஜன் சிங், “எனது வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நான் மாற்ற வேண்டும் என நினைத்தால் அது ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம்தான். அது மிகவும் தவறானது. நான் அப்படி செய்திருக்கக் கூடாது. நான் 200 முறை மன்னிப்பு கேட்டிருப்பேன்” என்று அவர் பேசியிருந்தார்.
மேலும் மற்றொரு தருணத்தில் ஸ்ரீசாந்தின் மகளை சந்திக்கும் வாய்ப்பு ஹர்பஜனுக்கு கிடைத்துள்ளது. அப்போது ஸ்ரீசாந்தின் மகள், “உங்களுடன் நான் பேச விரும்பவில்லை. நீங்கள் எனது தந்தையே அடித்துள்ளீர்கள்” என கூறியிருக்கிறார். இது ஹர்பஜனுக்கு நீங்காத வடுவை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீசாந்தை அறைந்த காரணத்தினால் ஹர்பஜன் சிங்கிற்கு 11 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.