காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா வெளியிட்ட வீடியோவால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சந்திர பிரியங்கா (35). அந்த அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் உறுப்பினர் இவர் தான். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாகும் இவர், கடந்த ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுங்கட்சி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் காரில் பயணித்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், சந்திர பிரியங்கா தனது கட்சிக்குள் நிலவும் அவல நிலைகளைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், தந்தையின் வழிகாட்டுதலால் அரசியலுக்கு வந்ததாகவும், அரசியலை மக்கள் சேவையின் ஒரு தளமாகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுகள் தொடர்பாக நீதிமன்ற சம்மன் வந்துள்ளதையும், இதன் பின்னணியில் ஒரு சக அமைச்சர் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அமைச்சராக இருந்த காலத்தில், சக கட்சியினரால் தொடர்ந்து தமக்கு அழுத்தம் மற்றும் தொந்தரவு வழங்கப்பட்டதாகவும், தற்போது எம்எல்ஏவாக இருந்தாலும், அதே நிலை தொடர்ந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு பெண் வளர்ந்து மேலே வந்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணம் வைத்துக் கொள்ள வேண்டாம். இது போன்ற அரசியலை எனது தந்தை எனக்கு சொல்லித் தரவில்லை. நீங்கள் டார்ச்சர் செய்வது எனக்கு தெரியாது என சந்தோஷத்தில் உள்ளீர்கள். ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், உங்கள் பெயரை நான் வெளிப்படுத்தவில்லை.
என்னுடைய செல்போனில் பேசும் ஆதாரங்களை அமைச்சர் பதவியை வைத்து வாங்கியுள்ளனர். நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இல்லை. மேலும், புகார் கொடுக்க உயரதிகாரி ஒருவரை சந்தித்தபோது, “சொத்துகளை வேறு பெயரில் பதிவு செய்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என அறிவுரை வழங்கப்பட்டதாகவும், இது தன்னிச்சையான கருத்தல்ல, ஒரு அழுத்தத்துக்குப் பிறகான பிரதிபலிப்பாக இருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.
ஒரு பெண் அரசியல்வாதியாக தன்னை தொடர்ந்து குறிவைக்கப்படும் சூழ்நிலை, ஆணாதிக்க அரசியலின் பிரதிபலிப்பாகவும், அவமதிக்கும் நோக்கத்திலான செயல்பாடாகவும் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நீங்களும் வாழுங்கள், என்னையும் வாழ விடுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது பெண் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு வைத்திருப்பது புதுச்சேரியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தீராத கடன் பிரச்சனை கூட தீர்ந்துவிடும்..!! ஞாயிற்றுக்கிழமை மறக்காமல் இந்த பூஜையை பண்ணுங்க..!!