ஸ்விக்கி, சொமாட்டோ, ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் நிழலாய் செயல்படுபவர்கள் தான் டெலிவரி ஊழியர்கள். அவர்கள் நாள்தோறும் பல கிலோமீட்டர்கள் பயணித்து, மக்களிடம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
அத்துடன், பெட்ரோல் விலைவாசி நாளுக்கு நாள் உயரும் நிலையில், மின்சார இருசக்கர வாகனங்கள் இவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையப்போகின்றன. இதனை உணர்ந்த தமிழக அரசு, நலவாரியத்தில் பதிவு செய்த 2000 இணையம் சார்ந்த சேவை மற்றும் டெலிவரி தொழிலாளர்களுக்கு தலா ₹20,000 மானியம் வழங்கும் திட்டத்தை கடந்த 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு மொத்தமாக ரூ.4 கோடி நிதியை ஒதுக்கியது.
இந்தத் திட்டத்தில் சேர விரும்பினால், அவர்கள் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் உணவு டெலிவரி, மளிகை பொருள் டெலிவரி, பை டாக்ஸி போன்ற ஆன்லைன் தலை மூலம் ஆர்டர்களை பெற்று சேவை வழங்கும் தொழிலாளராக இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தில் இரண்டு படிநிலைகள் உள்ளது. முதலில் நலவாரியத்தில் உறுப்பினராகி, பின்னர் மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நல வாரியத்தில் உறுப்பினராவது எப்படி?
* https://tnuwwb.tn.gov.in/ இணையதளத்திற்குச் செல்லவும்.
* முகப்பு பக்கத்தில் உள்ள “புதிய விண்ணப்ப பதிவு” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து OTP மூலம் உள்நுழையவும்.
* தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
* தொழிலாளர் உதவி ஆணையரின் ஒப்புதல் கிடைத்ததும், நிரந்தர பதிவு எண் SMS மூலம் வரும்.
* அதை பயன்படுத்தி நலவாரிய உறுப்பினர் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
மின்சார ஸ்கூட்டர் மானியத்திற்கு விண்ணப்பித்தல்
* மீண்டும் https://tnuwwb.tn.gov.in/ இணையதளத்திற்குச் செல்லவும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள “Subsidy for eScooter” லிங்கை கிளிக் செய்யவும்.
* உங்கள் நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்.
* தேவையான ஆதாரங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
தேவையான ஆணவங்கள்: தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் விவரம், முகவரி சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இ-சேவை மையங்களுக்கு சென்றும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்தில் சென்று, நலவாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் மானிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.