பாசிசத்தின் உச்சம்.. பண்ணையார் மனப்பான்மையோடு துரை வைகோ இருக்கிறார்.. கட்சியில் வைகோவின் நிலை இதுதான்..!! – விளாசிய மல்லை சத்யா

mallai sathya vaiko

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் நீடித்து வந்த நிலையில் அண்மையில் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இருவருக்கிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்தார். அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.


மேலும் மல்லை சத்யாவை என் உடன்பிறவாத தம்பியைப் போல நடத்தி வந்தேன். மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்து, கட்சியை பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக அவர் தொடர்பு வைத்துள்ளார். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடனும் நெருக்கமாகப் பழகி வருகிறார் என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார். அதன் பின்னர் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே வைகோவுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் மல்லை சத்யா. அதில்,”17/08/2025 தேதியிட்ட ஏழு பக்கங்கள் கொண்ட இரண்டு கடிதங்கள் கிடைக்கப் பெற்றேன். மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.ஏ.சத்யா ஆகிய என்னை உடனடியாக அனைத்துப் பொறுப்புகளிலிருந்து தற்காலிக நீக்கம் குறித்தும், கடிதம் கிடைக்கப் பெற்ற 15 நாட்களில் என் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளரான உங்களிடம் எழுத்துப் பூர்வமான விளக்கத்தை அளிக்கலாம் என்றும். அதாவது ஒரேநாளில் தங்களின் கையெழுத்து இட்டு வந்த இரண்டு கடிதங்களும் கிடைக்கப் பெற்றேன்.

அது எப்படி ஒரேநாளில் விளக்கமும், கட்சியிலிருந்து நீக்குவது குறித்த நடவடிக்கையையும் எடுக்கமுடியும்? டில்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடும் வழக்கறிஞர் திறன் கொண்டவர் தலைவர் வைகோ ஏன் இந்த முரண்பாடு? ஏன் இவ்வளவு குழப்பமும் தடுமாற்றமும்? முதல் கடிதம் விளக்கம் கேட்டும் அதே நாளில் என்னுடைய விளக்கத்தைப் பெறாமலேயே தற்காலிக நீக்கம் என்று கடிதம் வந்திருப்பது உட்கட்சி ஜனநாயக படுகொலை அல்லவா? மரணதண்டனை கைதிக்குக் கூட தண்டனையை நிறைவேற்றும் முன் கால அவகாசம் வழங்கப்படும் ஆனால் என் பொருட்டு அந்த அவகாசம் தர ஏன் தங்களுக்கு மனம் வரவில்லை? இது எந்தப் பிரிவின் கீழ் வருகிறது விளக்கம் சொல்லுங்கள்!

இந்த நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் படுத்தப் படாத ஜனநாயக பண்பு நலன் சிறிது கூட இல்லாத வலதுசாரி கார்ப்பரேட் சிந்தனை ஓட்டம் கொண்ட உங்கள் மகன் துரை இருக்கின்றார் என்பதுதானே உண்மை! உங்களின் இந்த நிலைமைக்காக நான் வருந்துகிறேன். இது தீர்ப்பை எழுதி வைத்து விட்டு போலியான விசாரணை நடத்தும் சர்வாதிகார பாசிச சிந்தனை! ஊரை ஏமற்ற போலியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உட்கட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டீர்கள்!

என்னை அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிக நீக்கம் குறித்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று உங்கள் கருணையை எதிர்பார்க்கமாட்டான் இந்த மல்லை சி ஏ சத்யா. மானமே மண்டியிடாதே வீரமே வீழ்ந்து விடாதே என்ற மூதுரையை என் இதயத்தில் பதித்துக் கொண்டவன், சரணாகதி என்பது எப்போதும் என் அகராதியில் எழுதப்படாத ஒன்று.

தலைவர் வைகோவே, அருள்கூர்ந்து உங்கள் வலது கையை எடுத்து உங்கள் இதயத்தின் பக்கம் வைத்து ஒரு நிமிடம் கண்களை மூடி என்னை நினைத்து சொல்லுங்கள்! நானா துரோகி நானா முதலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினேன்? உங்கள் மகன் துரை அரசியலுக்கு வரவேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தியது மற்றும் உட்கட்சி ஜனநாயக விரோதம் வாக்கெடுப்பு குறித்து முன்கூட்டியே 15 நாட்கள் அவகாசம் கொடுத்து அறிவித்தீர்களா?

வாக்குப் பெட்டி வைக்கும் வரை தலைமைக் கழக துணை பொதுச் செயலாளராக இருக்கும் எனக்கே நீங்கள் தெரிவிக்கவில்லை, வாக்கெடுப்பில் உங்கள் மகனுக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லி நீங்கள் பலரிடம் பேசினீர்கள், ஆதரவு திரட்டினீர்கள். வாக்கெடுப்பு எண்ணிக்கை முடிவு தெரியும் வரை நீங்கள் பட்ட அவஸ்தையை சகிக்க முடியாமல் இருந்தது, அதற்கு முன்பு நாங்கள் உங்களை அந்த நிலையில் பார்த்தது கிடையாது, ஒருவேளை அந்த காணொளி இருந்தால் எடுத்து போட்டுப் பாருங்கள்.

வாக்கெடுப்பு என்பது அந்த 106 பேர் கொண்ட நிர்வாக குழு மட்டும் தானா? உங்கள் மகன் துரை அரசியலுக்கு வருவது கட்சிக் கொள்கைக்கு எதிரானதாகும். அப்படி இருக்கும் போது வாக்கெடுப்பு நடத்தியதே வெளி வேஷம்! அப்படியே வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுத்து இருந்தால் இந்த முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்சினை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முடிவு இது குறித்து ஏன் பொதுக்குழுவின் கருத்தை நீங்கள் அறிய முன்வரவில்லை?

துரையின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அவர் ஜமீன்தார் பாணியில் பண்ணையார் மனப்பான்மையோடு பூர்ஷ்வா போன்று மறைமுகமாக தலைமைக் கழக நிர்வாகிகளை முன்னணியினரை குறிப்பாக என்னை கருங்காலிகள், கருப்பாடுகள், சிலீப்பர் செல் போன்ற நாகரீகப் பண்பாடற்ற தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வந்ததை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை?

துரை உங்கள் மகனாக இல்லாமல் இருந்தால் அப்படி பேச முடியுமா அல்லது பேசத்தான் விட்டு இருப்பார்களா? தங்க ஊசி என்பதற்காக எடுத்து கண்ணை குத்திக் கொள்ள முடியாது என்று தற்போது உங்கள் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்து இருக்கும் ஒருவரே உங்கள் மகன் துரை குறித்து உதிர்த்த பொன்மொழி.

2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நீங்கள் உங்கள் மகன் துரைக்கு அறிவுரை சொல்லி பேசிவிட்டு சொன்னீர்கள். இதை உங்கள் மத்தியில் சொன்னது போல் தனிப்பட்ட முறையில் எனது வீட்டில் சொல்லமுடியாது கோபித்துக் கொண்டு சண்டை இடுவார் என்று நீங்கள் பேசினீர்கள்! உங்களின் இந்த பரிதாபத்துக்குரிய நிலைமைக்காக நான் வருந்துகிறேன்.

பாராளுமன்றத்தில் எத்துனை மத்திய அமைச்சர்களை கேள்விகளால் துளைத்து எடுத்தீர்கள். நீங்கள் எங்களை அரசியல் படுத்தினீர்கள் ஜனநாயகப் படுத்தினீர்கள் ஆனால் உங்கள் மகன் துரையை நீங்கள் அரசியல் படுத்தவில்லை. உங்களால் கட்டுப்படுத்த முடியாதவராக துரை இருக்கின்றார், எனவேதான் தொண்டர்களால் கட்டி எழுப்பப்பட்ட மதிமுகவை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உங்கள் மகன் துரை உங்கள் கண் முன்னாலேயே அந்த கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறார். அதை கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஒரு மௌன பார்வையாளராகவே நீங்கள் கையறு நிலையில் இருப்பது துயரம்

கழகத்தின் தலைமை நிர்வாகிகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது என்று திடமாக வலியுறுத்தப்படுகிறது என்ற உங்கள் கடிதத்தை முடித்து வைத்து உள்ளீர்கள். அது தலைமை நிர்வாகிகளின் குறிப்பாக உங்கள் மகன் துரையின் நடவடிக்கையை பொறுத்தது. யாரும் இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை குறைகளை தவறுகளைச் சுட்டிக் காட்டக்கூடாது என்பது பாசிசத்தின் உச்சம்.

நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின் போது சொன்னது: “என்னைப் பற்றி நல்ல செய்திகளை போடாவிட்டாலும் பரவாயில்லை என் குறைகளை தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள் ஆனால் ஒரு போதும் என்னைப் பற்றிய செய்திகள் மட்டும் போடாமல் இருந்து விடாதீர்கள்” என்றார். இதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. உங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாராவது இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கின்றார்களா சிலவேளைகளில் நீங்கள் அவசரப்பட்டு நிதானம் இழந்து தனிமனித தாக்குதலை சமூகம் குறித்து பரம்பரை தொழிலைக் குறித்து பேசி கண்டனத்திற்கு ஆட்பட்டு வருத்தம் தெரிவிக்கவில்லையா?

உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது எதையும் நாங்கள் நம்பாமல் கண்மூடித்தனமாக வாழ்வது என்றாலும் – வீழ்வது என்றாலும் தலைவர் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களை பின்பற்றி வந்தோம், ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி யாராவது புறம் பேசினால் அதை நம்புவீர்கள்.

தொண்டன்-தலைவன் மீது நம்பிக்கை வைத்து இருப்பான் ஆனால் தலைவன் தொண்டன் மீது நம்பிக்கை வைக்காமல் போனதன் விளைவே மதிமுகவின் இன்றைய நிலைமைக்கு காரணம். “அரசியல் பிழைத்தோற்கு அறமே கூற்றுவன் ஆகட்டும்” என்ற நீதியும் நின்று நிலைக்கட்டும். எங்கள் அடிவயிறு எரிகின்ற உளச்சான்று உண்மைகள் நிச்சயம் சுடும். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள் இது மல்லை சத்யாவின் வாக்கு அல்ல சத்தியத்தின் வாக்கு” என கூறியுள்ளார்.

Read more: வெறும் 3.5 அடி உயரம்தான்!. முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா!. யார் இவர்?.

English Summary

The height of fascism.. Durai Vaiko has a farmer mentality.. This is Vaiko’s position in the party..!! – Mallai Sathya

Next Post

கள்ளக்காதலனுடன் பெட்ரூமில் உல்லாசமாக இருந்த பெண் போலீஸ்..!! ஸ்பாட்டுக்கு வந்த கான்ஸ்டபிள் கணவன்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

Tue Sep 2 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்யா நகரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். கணவன் – மனைவி இருவருமே வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கணவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி வேறொருவருடன் படுக்கையறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரும் காவல்துறையில் தான் காவலராக பணியாற்றி […]
Police 2025

You May Like