திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகர் என்பவரின் மகன் பரசுராம் (20). இவர் கூலி தொழிலாளி. பரசுராம், மன்னார்குடி அருகே ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி காயத்ரி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் தனியாக இருந்த பரசுராம், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் வடகோவனூரில் இருந்து லெட்சுமாங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோரையாறு பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து, அவரது வாகனத்தை மோதியது.
கடுமையாகக் காயமடைந்த பரசுராமை அங்கிருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமாப்பிள்ளை பரசுராம் திடீர் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி, திருவாரூர் மாவட்டத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: உங்கள் UPI பேமேண்ட் பாதுகாப்பாக இருக்க உதவும் 6 டிப்ஸ்..! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!