சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கிளர்ச்சிக் குழுவான சூடான் விடுதலை இயக்கம்/இராணுவம் (SLM/A) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு நபர் மட்டுமே உயிருடன் மீண்டுள்ளார் என கூறப்படுகிறது.
மர்ரா மலைத் தொடரின் தாராசின் கிராமத்தில், பல நாட்களாக பெய்த கனமழையால் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரழிவால், சிட்ரஸ் உற்பத்திக்கு பெயர் பெற்ற அந்த பகுதி முழுவதும் சிதைவடைந்துள்ளதாகவும், கிராம மக்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் களிமண் மற்றும் குப்பைகளின் அடியில் புதைந்துள்ளதால், அவற்றை மீட்க ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, டார்ஃபர் பகுதியில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக சர்வதேச உதவி அமைப்புகள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 2023 முதல் சூடானில் இராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் அவரது முன்னாள் துணை, RSF தளபதி முகமது ஹம்தான் டக்லோ இடையே நடைபெறும் அதிகாரப் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் நிலைமை சீர்குலைந்துள்ளது. இந்தப் போரில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 மில்லியன் பேர் நாட்டுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 4 மில்லியன் பேர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
Read more: திருமணம் ஆன 3 மாதத்தில் பிரிந்து போன காதல் மனைவி.. தனிமையில் தவித்த கணவனுக்கு இப்படியா நடக்கனும்!



