உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், வாரணாசியில் 17 வயதான ஒரு சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 5 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள இருவரும் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது அனைவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்நிலையில், சிறுமி, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு பிரசவ வலியுடன் ஆட்டோ ஒன்றில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியிலேயே ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இனி “இவளுக்காகவே வாழ வேண்டும்” என்ற உறுதியுடன், அந்த சிறுமி இருந்த நிலையில், அந்த இரவிலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல், வாந்தி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து சவுபிபூர் காவல் நிலைய அதிகாரி அஜித் குமார் கூறுகையில், “மரணத்திற்கு காரணமாக இருந்த விவரங்களை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை (DNA Test) மற்றும் பிற மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சிறுமியின் உடல் நலமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.