பெரும்பாலானோர், சினிமாவில் வருவதுபோல் கடவுள் நேரில் வந்து கைகொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கடவுள் எப்போதும் அந்த வகையில் வெளிப்படுவதில்லை. அவர் உதவி செய்கிறார், ஆனால் நாம் எதிர்பார்க்கும் முறையில் அல்ல.
இதை ஒரு கதைபோல் பார்க்கலாம்.. ஒரு காட்டில் நடந்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென பசி எற்பட்டது. அருகில் இருந்த ஒரு மரத்தில் கனிந்த பழங்களைப் பார்த்து, ஏறி சில பழங்களைத் தின்றான். மேலே இருந்த இன்னும் சில பழங்களை எட்ட முயன்றபோது, அவன் நின்றிருந்த கிளை முறிந்து விட்டது. தற்காலிகமாக கீழே இருந்த கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த அவன், தன்னால் மீள முடியாத நிலைக்கு வந்துவிட்டதாக நினைத்து அலற ஆரம்பித்தான்.
அந்த சமயத்தில், அருகில் வந்த ஒரு முதியவர், மரத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனை பார்த்து, சிறிய கல்லை எறிந்தார். வலியில் ஆத்திரம் கொண்ட இளைஞன் மீண்டும் கோபத்துடன் அழைத்தபோதும், பெரியவர் இன்னும் சில கற்களை வீசினார். கோபத்தில் இருந்த இளைஞன், தன்னுடைய முழு வலிமையையும் பயன்படுத்தி மேலே ஏறி, மண்ணில் கால் பதித்துவிட்டு, நேராக பெரியவரிடம் சென்று வாக்குவாதம் செய்யத் தொடங்கினான்.
அப்போது, பெரியவர் அமைதியாக கூறினார். “நீ அந்த நிலைமையில் முழுமையாக பயத்தில் உறைந்து விட்டாய். உன் மனமும், உடலும் செயலிழந்திருந்தன. நான் எறிந்த கற்கள் உன்னுடைய பயத்தை தூண்டியது. அதனால் நீ சிந்திக்கத் தொடங்கினாய். முயற்சி செய்யத் தொடங்கினாய். கடைசியில், உன்னையே நீ காப்பாற்றினாய்” என்று தெரிவித்தார்.
இந்த கதையின் வழியாக, ஒரு முக்கியமான உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் உதவி என்பது, ஒரு அற்புதமாக வெளிப்படவில்லை என்று அதை மறுக்க முடியாது. பல சமயங்களில், கடவுள் நம்முடைய மனதை மாற்றும் ஒரு சின்ன திடுக்கிடும் நிகழ்வாகவோ, யாராவது ஒருவர் சொல்லும் வார்த்தையாகவோ, அல்லது நம்முள் எழும் ஒரு உந்துதலாகவோ வரும்.
நாம் கடவுளை அழைக்கும் போது, அவர் நம்மை கைப்பிடித்து இழுத்து வெளியேற்ற மாட்டார். ஆனால், உந்துதலைக் கொடுப்பார். நம்மிடம் இருந்தும், எப்போதும் நம்மில் இருந்தும், அந்த மாற்றம் உருவாகும். உண்மையான நம்பிக்கையின் சக்தி என்பதுதான் இது.
Read More : இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் ஏன் அதிகரிக்கின்றன?. ஆபத்தில் உள்ள மாநிலம் எது?. ஷாக் ரிப்போர்ட்!



