திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே ஜூன் 18-ஆம் தேதி தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம், ஒரு கொலை வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் ரயில் விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், 45 நாட்களுக்குப் பிறகு கொலையின் பின்னணியைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர், டாஸ்மாக் குடோனில் பணிபுரிந்த அரவிந்த் மேத்யூ என அடையாளம் காணப்பட்டார். இவர் தனது பகுதியில் பொதுமக்களிடம் மிரட்டி மாமூல் வசூலித்து வந்துள்ளார். விசாரணையில், ஐயப்பாக்கத்தைச் சேர்ந்த உஷா (29) என்ற பெண்ணுடன் அரவிந்துக்கு பழக்கம் இருந்ததும், அவர் உஷாவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, பணம் கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த உஷா, தனது 17 வயது கணவரிடம் இதைக் கூறியுள்ளார்.
பின்னர், அரவிந்தின் தொல்லை தாங்க முடியாமல், உஷா அதே பகுதியைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் பால்ராஜ் என்பவருடன் இணைந்து அரவிந்தைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, ஜூன் 18ஆம் தேதி, உஷா அரவிந்தை தனது தோழியின் வீட்டிற்கு அழைத்து, மது குடிக்க வைத்துள்ளார். அப்போது, போதையில் இருந்த அரவிந்தை, சினிமாவில் வருவது போல் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி, கை கால்களை கட்டிப் போட்டுள்ளார்.
அப்போது, உஷாவின் 17 வயது கணவர், பால்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அறைக்குள் நுழைந்து, அரவிந்தை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், அரவிந்தின் உடலை மிதித்தபடி அவர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர். உஷாவின் கணவர் அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். பின்னர், சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்று, போதையில் இருப்பவர் போல தண்டவாளத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் உஷா, அவரது 17 வயது கணவர் மற்றும் மற்றொரு நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.