கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார். இதில், பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு வங்கி கணக்கு சிக்கல் காரணமாக முதல் நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத நிலையில், மணி ஆர்டர் மூலமும் பணம் வழங்கப்பட்டது.
இனி மாதம்தோறும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகையின் 2-வது மாத உரிமைத்தொகை, அதாவது அக்டோபர் மாதத்திற்கான உரிமைத்தொகை இந்த மாதம் 14ஆம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இன்று வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் பணி துவங்கியுள்ளது. இன்று இரவுக்குள் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தியை பார்த்ததும் மகளிர் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.