கோவை மாவட்டம் பீளமேடு பிஆர்பி கார்டனைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சர்குணன் என்பவரைத் திருமணம் செய்த அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு கோவையில் குடியேறியுள்ளார்.
தனது கணவர், மாமனார் நீலமேகம், மாமியார் உமாராணி மற்றும் அவர்களது உறவினர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கணவரின் குடும்பத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தனது தந்தை 2020-ஆம் ஆண்டு உயிரிழந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தம்பதிக்கு 2020-ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை தற்போது 5 வயதாகும் நிலையில், கணவர் தரப்பில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கணவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாகக் கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில் கணவர், மாமனார், மாமியார் மற்றும் சில உறவினர்கள் சேர்ந்து தன்னையும், தனது தாய் மற்றும் தம்பியையும் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இதில், தம்பிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாயார் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதற்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.