லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி, வரும் 19 முதல் 24ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கர்நாடகா, கேரளாவில் அதிகாலை காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் லியோவுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி பெற்று விட வேண்டும் என்ற முடிவில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர முறையீடு செய்துள்ளார்.
அதாவது, காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே லியோ படத்தை திரையிட அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்களே இருப்பதால், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.