ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத், வியாழக்கிழமை அன்று இந்த எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, வியாழக்கிழமை அன்று அதே பகுதியில் மூன்றாவது முறையாக 6.2 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
ஆனாலும், இந்த அதிர்வுகள் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. “நாங்கள் ஒரு கட்டிடத்தில் இருந்தபோது, அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடினர்” என்று குனார் மாகாணத்தில் இருந்து அல் ஜசீரா செய்தியாளர் அலி ஹஷெம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதன் மையம் பூமிக்கு அடியில் சுமார் 8 கி.மீ. ஆழத்தில் இருந்ததால், அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் மற்றும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான அடுத்த நிலநடுக்கம் ஆகியவற்றால் 3,640-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஐ.நா.வின் எச்சரிக்கையின்படி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக பாதிப்புக்குள்ளான குனார் மாகாணத்தில் இந்த நிலைமை மோசமாக உள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் (WFP) இயக்குநர் ஜான் அய்லீஃப், “களத்தில் நாங்கள் காண்பது முழுமையான பேரழிவைத்தான். வீடுகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டதாக” அவர் வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் 6,700-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் கிராமங்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்தை அடைய 3 மணி நேரம் வாகனப் பயணமும், இரண்டு மணி நேரம் நடைப்பயணமும் தேவைப்படுவதாகச் செய்தியாளர்கள் கூறியுள்ளனர். இதனால், “மலைகளுக்குப் பின்னால் சிலர் மௌனமாக உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்” என்ற சோகமான நிலை நிலவுகிறது.
மேலும், தலிபான் அரசு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி ராணுவ கமாண்டோக்களை அனுப்பி, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. உலக உணவுத் திட்டத்திடம் சில வாரங்களுக்கு மட்டுமே தேவையான பொருட்கள் இருப்பதாகவும், தொலைதூர கிராமங்களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்ல லாரிகளால் செல்ல முடியாததால் சிறிய வாகனங்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் அய்லீஃப் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான், இந்திய மற்றும் யூரேசிய நிலப்பகுதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபரில், ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு ஒரு வருடம் முன்பு, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 1,000 உயிர்களைப் பறித்தது குறிப்பிடத்தக்கது.
Read More : செல்வத்தின் அதிபதியான குபேரருக்குப் பிடித்த ராசிகள் எவை..? எப்போதும் பணத்திற்கு பஞ்சமே வராது..!!



