வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10,005-க்கு, ஒரு சவரன் தங்கம் ரூ. 80,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரியில் சவரன் விலை ரூ. 57,000 இருந்தது. இன்று அதே சவரன் ரூ. 80,000 தாண்டியுள்ளது. அதாவது வெறும் சில மாதங்களில் சுமார் ரூ. 20,000 கூடுதலாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,050 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தங்க விலையின் புது உச்சத்துக்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியாவுக்கு எதிராக அவர் 50% வரி விதித்ததால் உலக பொருளாதாரத்தில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் நேரடியாக தங்க விலையை உயர்த்தியுள்ளது என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறியுள்ளார்.
ஜெயந்தி லால் சலானி மேலும் கூறுகையில்: “டொனால்ட் டிரம்பின் தவறான முடிவுகள் காரணமாக பல நாடுகள் டாலருக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன. இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கருவூலத்திலும் தங்க இருப்புகளை அதிகரித்துள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கிறது. ரூ.80,000 கடந்த நிலையில், இன்னும் சிறிதளவு உயர வாய்ப்பு உள்ளது” என்றார்.
இது ஒரு புறம் இருக்க தற்போது பண்டிகை காலமும், திருமண சீசனும் தொடங்கியுள்ளதால் தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்திருந்தாலும், மக்கள் ஆர்வம் குறையாமல் இருப்பது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிக முக்கியமாக தங்கம் வாங்கும்போது 916 ஹால் மார்க் முத்திரையும், 6 இலக்க HUID எணும் பில்லில் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். மேக்கிங் சார்ஜ் அதிகம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஒப்பிட்டு வாங்குவது நல்லது.



