விருத்தாசலத்தில் சுமார் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் பாமக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கிருபை என்பவர், விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி சலீம் (28) ரூ.10 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், மருத்துவப் படிப்புக்காகக் கடன் பெற முயன்ற மெய்கண்டநாதன் என்பவரிடம், விரைவாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் வரை சலீம் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இது மட்டுமன்றி, 17 பேரிடம் சுமார் ரூ.1.75 கோடி வரை மோசடி செய்ததாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன.
இதுதவிர, பெண்ணாடம், திட்டக்குடி, கருவேப்பிலங்குறிச்சி போன்ற காவல் நிலையங்களிலும் சலீம் மீது ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. இதன் மூலம், அவர் மொத்தமாக ரூ.6 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த புகார்களின் அடிப்படையில், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் அய்யனார், சலீம் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரைத் திருப்பூரில் நேற்று கைது செய்தார். கைது செய்யப்பட்ட சலீம், பாமகவின் கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பாமகவுக்குள் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், நிர்வாகியின் இந்த செயலால் அக்கட்சி தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Read More : அடிக்கடி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்..? 18% GST..!! இனி ஒரு பிரியாணி எவ்வளவு தெரியுமா..?



