நேபாளத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்த்து ஜெனரேஷன் Z தலைமையிலான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நாடு தழுவிய வன்முறைகளால் அரசியல் சூழல் பதற்றமடைந்துள்ளது. நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, நிலைமையை சமாளிக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கூட்டினார். “இந்த கடினமான சூழ்நிலையில் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்” என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
போராட்டக்காரர்கள் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வீட்டிற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஜனாதிபதி ராம் சந்திர பவுடலின் இல்லத்துக்கு தீ வைத்தனர். தகவல் தொடர்பு மற்றும் ஐடி அமைச்சர் பிருத்வி சுப்பா குருங்கின் வீட்டில் தீ வைத்தனர். துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பிஷ்ணு பவுடெல், முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், நேபாள ராஸ்ட்ரா வங்கி ஆளுநர் பிஸ்வோ பவுடெல் ஆகியோரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இல்லத்தின் மீதும், எதிர்க்கட்சித் தலைவர் புஷ்ப கமல் தஹால் வீட்டின் மீதும் கற்கள் வீசப்பட்டன. போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் பல மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக தொடரும் இந்த வன்முறையால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியதால் பல இடங்களில் நிலைமை தீவிரமடைந்தது. இதனிடையே வேளாண் அமைச்சர் ராம் நாத், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் உள்ளிட்டோர் பதவி விலகினர்.
Read more: வட்டி மட்டுமே ரூ.45,459 கிடைக்கும்!அற்புதமான தபால் நிலையத் திட்டம்!