திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, 1.15 கோடிப் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால், இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் வெற்றி காரணமாக, விடுபட்ட பெண்களும் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டினர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, திட்டத்தை விரிவாக்க அரசு முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம், தகுதியான பெண்களிடம் இருந்து புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் வரை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். நவம்பர் மாதம் வரை கால அவகாசம் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கடந்த முறை, வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்கள் கள ஆய்வு செய்து, பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்த்த பின்னரே பயனாளிகள் இறுதி செய்யப்பட்டனர். இந்த முறையும் கள ஆய்வு, வங்கி விவரங்கள் உள்ளிட்டவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரே, புதிய பயனாளிகள் அறிவிக்கப்படுவார்கள்.
விரைவில் அறிவிப்பு..?
துணை முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 15-ஆம் தேதி, புதிய பயனாளிகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது.
Read More : சனிப்பெயர்ச்சி..!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி..? யாருக்கெல்லாம் பண மழை கொட்டும்..?