திடீர் மழை, வெள்ளம் அல்லது வேறு காரணங்களால் நமது பள்ளிச் சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்கள் தண்ணீரில் நனைந்துவிட்டால், பதற்றமடைந்து விடுவோம். காகிதங்கள் ஒட்டிக்கொள்ளுமோ, எழுத்துக்கள் அழிந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால், பதற்றப்படாமல் சரியான வழிமுறைகளை பின்பற்றினால், நனைந்த ஆவணங்களை கூட எளிதாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
தண்ணீரில் நனைந்த ஆவணங்களை சரிசெய்ய, முதலில் செய்ய வேண்டியது அதில் உள்ள ஈரத்தை முடிந்தவரை உறிஞ்சி எடுப்பதுதான். சுத்தமான, கசங்காத டிஷ்யூ பேப்பர்கள் அல்லது மென்மையான மைக்ரோஃபைபர் துணியை எடுத்து, காகிதத்தின் மீது மெதுவாக ஒற்றி எடுக்கவும். காகிதத்தின் மீது அழுத்தித் தேய்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஈரம் அதிகம் இருந்தால், நனைந்த டிஷ்யூவை மாற்றி, புதியவற்றை பயன்படுத்த வேண்டும்.
பல ஆவணங்கள் ஒன்றாக நனைந்திருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. அவற்றை அவசரமாகப் பிரிக்க முயன்றால் கிழிந்துவிடும். எனவே, மிகுந்த கவனத்துடன் பிரிக்க வேண்டும். காகிதங்களுக்கு இடையில் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது மெழுகு காகிதத்தை வைத்து, மெதுவாகப் பிரிக்க முயற்சி செய்யலாம்.
ஈரம் உறிஞ்சப்பட்ட பிறகு, ஆவணங்களை முழுமையாக உலர வைக்க வேண்டும். இதற்கு மிகவும் பாதுகாப்பான வழி, அவற்றை காற்றில் உலர்த்துவதுதான். ஒரு துணியின் மீது தனித்தனியாக விரித்து, ஒரு மின்விசிறியின் கீழ் உலர விடலாம். நேரடியாக வெயிலில் வைப்பதைத் தவிர்க்கவும். அது காகிதத்தை உடையச் செய்து, எழுத்துக்களை மங்கச் செய்துவிடும்.
அவசரத் தேவை என்றால், அயர்ன் பாக்ஸை குறைந்த வெப்பநிலையில் வைத்து, ஆவணத்தின் மேலும் கீழும் டிஷ்யூ பேப்பர்களை வைத்து மெதுவாக அயர்ன் செய்யலாம். இது மீதமுள்ள ஈரத்தை உறிஞ்சி, காகிதத்தைச் சுருக்கங்கள் இல்லாமல் உலர வைக்கும்.
தவிர்க்க வேண்டியவை
* நனைந்த காகிதங்களைக் கையால் கசக்கவோ, பிழியவோ கூடாது.
* ஹேர் ட்ரையர் போன்ற வெப்ப கருவிகளை நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம். அது காகிதத்தை மேலும் சேதப்படுத்தும்.
* காகிதங்கள் முழுமையாக உலரும் வரை, அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கக் கூடாது.
* எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து உங்கள் ஆவணங்களைப் பாதுகாக்க, அவற்றை எப்போதும் ஜிப்-லாக் கவர்கள் அல்லது நீர்புகாத ஃபைல்களில் வைத்துப் பாதுகாப்பது மிகவும் நல்லது.