நேபாளத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை இடைக்காலப் பிரதமராக்காவிட்டால், ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் மற்றும் ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், Gen Z இயக்கத்தின் முகமாகக் கருதப்படும் ஹாமி நேபாள அரசு சாரா அமைப்பின் தலைவரான சுதன் குருங், மூத்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அழைப்பில், கார்க்கியின் பெயரில் ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால், ஜனாதிபதி அலுவலகத்திற்கு பேரணி நடத்துவேன் என்று குருங் கூறுவதைக் கேட்கலாம். மேலும், “சுஷிலா கார்க்கி பிரதமராக நியமிக்கப்படாவிட்டால், மார்பில் ஒரு குண்டுக்கு தயாராக இருங்கள்” என்று ஜனாதிபதியை எச்சரிப்பதையும் வீடியோ காட்டுகிறது. அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால், அவர்கள் அனைத்து அரசியல் தலைவர்களையும் கொல்லத் தயாராக இருப்பதாகவும், “நாங்கள் எப்படியும் இறந்து கொண்டிருக்கிறோம், இறக்கத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
குருங் வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்தது மட்டுமல்லாமல், அழைப்பின் போது ஜனாதிபதியை அவதூறாக பேசினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன… மேலும் அந்த வீடியோவில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜனாதிபதி பவுடலை சாலையில் இழுத்துச் செல்வதாக குருங் மிரட்டுவதையும் கேட்கலாம். கார்க்கி பிரதமராக ஆக்கப்படாவிட்டால், நாங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம். மார்பில் குண்டுகளை வாங்க தயாராக இருங்கள்” என்று அறிவித்தார்.
கார்க்கி விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படாவிட்டால், விளைவுகள் “மிகவும் கடுமையானதாக” இருக்கும் என்று அவர் ஒரு இராணுவ அதிகாரியை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இடைக்கால அரசு அமைப்பதில் தாமதம் : 5 நாட்கள் வன்முறை போராட்டங்கள் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் நேபாளத்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. இதுகுறித்து நேற்றிரவு, ஜனாதிபதி பவுடேலும் இராணுவத் தலைவர் சிக்டெலும் ஜனாதிபதியின் இல்லமான ஷீதல் நிவாஸில் விவாதங்களை நடத்தினர். சுஷிலா கார்க்கியின் பெயருக்கு ஆதரவாக ஒருமித்த கருத்து உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் குருங்கின் எச்சரிக்கை வீடியோ புதிய கவலை எழுப்பி உள்ளது. குருங் தலைமையிலான அமைப்பான ஹமி நேபாளி, Gen Z போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.