குஜராத்தின் கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து Q400 ரக டர்போப்ராப் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மும்பை நோக்கிப் புறப்பட்டது. விமானத்தின் வலதுபுற ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், டேக் ஆஃப் ஆகும் காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.
விமானம் ஓடுபாதையில் வேகமாக வந்தபோது, வலதுபுறத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்துள்ளது. விமானத்தில் மொத்தமாக நான்கு சக்கரங்கள் இருக்கும். வலதுபுறத்தில் ஒரு சக்கரம் கழன்ற நிலையில், விமானம் எப்படித் தரையிறங்கும் எனப் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தின் மொத்த எடையையும் இடதுபுற சக்கரங்களுக்கு செல்லுமாறு செய்தார்.
இதனால், வலதுபுறத்தில் இருந்த ஒற்றை சக்கரம் பாதுகாப்பாக தரையிறங்க போதுமானதாக இருந்தது. விமானம் மும்பை விமான நிலையத்தில் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.