உத்தரப்பிரதேச மாநிலம் கிரட்பூர்ணி பகுதியைச் சேர்ந்த பரூக் (35) என்பவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக, அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொலைபேசி சிக்னலை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பரூக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், பரூக்கின் மனைவி அம்ரின் (34) மற்றும் அவரது சொந்த மருமகன் மெர்பான் (20) ஆகியோர் முதன்மை குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. பரூக்கின் தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், இறுதியாக அது இயங்கிய இடத்தை சோதித்தபோது, அது ஊரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள காட்டுப் பகுதி என தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் முட்புதருக்குள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பரூக்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது திட்டமிட்ட கொலை என சந்தேகித்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பரூக்கின் மனைவி அம்ரினுக்கும், அவரது மருமகன் மெர்பானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அம்ரின் தனது தொலைபேசியில் மெர்பானுடன் நடத்திய உரையாடல்கள், வீடியோக்கள் மற்றும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் என அனைத்தும் பரூக்குக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து மனைவியிடம் சண்டையிட்டதுடன், மெர்பானையும் மிரட்டியுள்ளார்.
எனவே, பரூக் உயிருடன் இருந்தால் தங்களுக்கு பிரச்சனை என்று உணர்ந்த அம்ரின், மெர்பான் இருவரும் அவரை கொலை செய்ய முடிவு செய்து, மெர்பான் தனது நண்பர் உமருடன் சேர்ந்து, நாட்டு துப்பாக்கிகளை வாங்கி, பரூக்கைக் காட்டுப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு, இருவரும் சேர்ந்து பரூக்கிற்கு மது வாங்கிக் கொடுத்து தலையில் கல்லால் அடித்து, நெஞ்சில் 5 முறை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் மெர்பான் மற்றும் உமரை கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது, தப்பிக்க முயன்ற மெர்பானின் காலில் சுட்டுப் பிடித்தனர். இதனால், பயந்துபோன உமர் உடனடியாக போலீசில் சரணடைந்தார். கொலைக்குப் பின், அம்ரின் தலைமறைவாக உள்ளதால், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.