நாடு முழுவதும் வரவிருக்கும் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம், பல்வேறு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோருக்கு பெரும் நிம்மதி அளிக்க உள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ‘வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி 2.0’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது..?
டிராக்டர் : டிராக்டருக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள ஒரு டிராக்டரை வாங்குபவர்கள் ரூ.42,000 வரை சேமிக்க முடியும்.
டிராக்டர் டயர்கள் மற்றும் உதிரி பாகங்கள்: இவற்றுக்கான ஜிஎஸ்டி 18% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால், ரூ.50,000 மதிப்புள்ள டயர்களின் விலை ரூ.6,500 குறையும்.
இருசக்கர வாகனங்கள் : ரூ.1 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், ரூ.6 லட்சம் மதிப்புள்ள சிறிய கார்களுக்கு ரூ.60,000 வரையும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆட்டோக்களுக்கு ரூ.30,000 வரையும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பட்டு மற்றும் மதுரை சுங்குடி சேலைகள் : இந்த புகழ்பெற்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் கலை மற்றும் உணவுப் பொருட்கள் : தஞ்சாவூர் பொம்மைகள், பவானி ஜமக்காளம், சுவாமிமலை வெண்கல சிலைகள், மணப்பாறை முறுக்கு, தென்னை நார் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் : பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை குறைய வாய்ப்புள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள் : ரூ.40,000 மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு ரூ.4,000 வரையும், ரூ.35,000 மதிப்புள்ள ஏசி-களுக்கு ரூ.3,500 வரையும், ரூ.60,000 மதிப்புள்ள ஹீட்டர்களுக்கு ரூ.7,000 வரையும் விலை குறையும்.
கல்வி உபகரணங்கள் : நோட்டுப் புத்தகங்கள், ரப்பர், பென்சில், கிரேயான்ஸ் போன்ற பள்ளிப் பொருட்களின் விலை குறைகிறது. இதனால், தமிழ்நாட்டில் படிக்கும் சுமார் 1.5 கோடி குழந்தைகளின் பெற்றோர் ரூ.850 வரை சேமிக்க முடியும்.
கட்டுமானம் : ரூ.50,000 மதிப்புள்ள சிமெண்ட் கொள்முதலில் ரூ.5,000 வரை சேமிக்கலாம். இது பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பெரும் பயன் அளிக்கும்.
மருந்துப் பொருட்கள் : ரூ.1,000 மதிப்புள்ள மருந்துகளுக்கு ரூ.100 வரையும், புற்றுநோய் மருந்துகளுக்கு ரூ.1,200 வரையும் விலை குறையும்.