கர்ப்பப்பையில் உருவாகும் கட்டிகள் பொதுவாக புற்றுநோய் அல்ல. இது புற்றுநோயாக மாறாது. 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது பொதுவான ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும், சில நேரங்களில் கட்டிகள் பெரிதாக வளர்ந்து உடல் அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். இது குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர். ஓவியா அருண்குமார் விரிவாக விளக்கியுள்ளார்.
கர்ப்பப்பை கட்டிகள் தொடக்க நிலையில் பெரிய அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. இதனால், பலரும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதில்லை. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அடிவயிற்றில் வலி, கனமான உணர்வு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்தக் கட்டிகளின் அளவு மற்றும் எண்ணிக்கையை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். இளம்பெண்களுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு, தாங்க முடியாத வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்றில்லை. சிறிய அளவிலான கட்டிகள் அசௌகரியம் ஏற்படுத்தவில்லை என்றால் சிகிச்சையே போதுமானது. ஆனால், கட்டிகள் தொடர்ந்து வளர்ந்தால், அவற்றை அகற்ற வேண்டும். சில நேரங்களில், கட்டியின் அளவைப் பொறுத்து கர்ப்பப்பையையும், சினைப்பையையும் கூட அகற்ற வேண்டி வரும்.
லேப்ராஸ்கோபி போன்ற அறுவை சிகிச்சை முறைகள் மூலம் கட்டிகளை அகற்றலாம். கட்டிகள் மிகப் பெரியதாக இருந்தால், கர்ப்பப்பை நீக்கம் செய்யப்படலாம். சினைப்பையிலும் கட்டிகள் இருந்தால் அல்லது தேவைப்பட்டால், சினைப்பையையும் அகற்ற வேண்டியிருக்கும்.
மாதவிடாய் நின்ற பிறகு கர்ப்பப்பை அகற்றப்பட்டால், அது நேரடியாக எலும்புகளைப் பாதிக்காது. ஆனால், பொதுவாக இந்த வயதில் பெண்களுக்கு எலும்பு பலவீனம், கால்சியம் குறைபாடு போன்றவை ஏற்படும். இதற்காக மருத்துவரின் பரிந்துரையுடன் கால்சியம் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவசியம். ஹார்மோன் குறைபாடுகள் ஏற்பட்டால், ஹார்மோன் மாற்று சிகிச்சையும் தேவைப்படும். கர்ப்பப்பை கட்டிகள், கருத்தரித்த பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்பதால், உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.