சீனாவைப் போலவே, கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் புதிய நோய்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. ஆனால் இந்த முறை கேரளாவில் மிகவும் பயங்கரமான ஒரு நோய் தோன்றியுள்ளது.. மூளையை உண்ணும் அமீபா நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் காரணமாக கேரளாவில் ஏற்கனவே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரள சுகாதாரத் துறை இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அரிதான ஆனால் மிகவும் ஆபத்தான மூளை தொற்று ஆகும். திருவனந்தபுரத்தில் 17 வயது சிறுவனுக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த பாதிப்பு வெளிச்சத்துக்கு வந்தது.
சிறுவனின் நோய் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் தொற்று காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, திருவனந்தபுரம் அக்குளத்தில் உள்ள சுற்றுலா கிராமத்தில் உள்ள நீச்சல் குளத்தை சுகாதாரத் துறை மூடி, சோதனைக்காக நீர் மாதிரிகளை சேகரித்துள்ளது. சிறுவன் முந்தைய நாள் தனது நண்பர்களுடன் அதே நீச்சல் குளத்திற்குச் சென்று அங்கு குளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
செப்டம்பர் 14 அன்று சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விரிவான நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு கேரளாவில் 67 மூளையை உண்ணும் அமீபா வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 18 இறப்புகள் அடங்கும். இந்த கொடிய நோயைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசரமாகத் தேவை. பொதுமக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நோய்க்கு எதிராக நாம் வலுவான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். கால்நடைகள் குளிக்கும் நீர்நிலைகள் உட்பட, தேங்கி நிற்கும் அல்லது மாசுபட்ட நீரில் முகத்தைக் கழுவவோ அல்லது குளிக்கவோ கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கிணறுகள் அறிவியல் ரீதியாக குளோரினேஷன் செய்யப்பட வேண்டும், மேலும் நீர் பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்களும் முறையாக குளோரினேஷன் செய்யப்பட வேண்டும், பராமரிப்பு தொடர்பான பதிவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும், வீடுகளில் உள்ள நீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். அமீபா உங்கள் மூக்கு வழியாக உங்கள் மூளைக்குள் நுழைகிறது, எனவே தண்ணீர் உங்கள் மூக்கில் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் கூறினார்.
கடந்த வாரம் கேரளாவில் ஒரு மரணம் ஏற்பட்டதன் மூலம், ஒரு மாதத்தில் இந்த நோயால் 5 இறப்புகள் மாநிலத்தில் பதிவாகியுள்ளன. மலப்புரம் மாவட்டம் வந்தூரைச் சேர்ந்த 56 வயது ஷோபனா என்ற பெண் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார், இதன் மூலம் மாநிலத்தில் ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த 45 வயது ரதீஷ் என்ற மற்றொரு நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.



