மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். 35 வயதான நடிகை ரெஞ்சுஷா மேனன் தனது கணவர் மனோஜுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நடிகை ரெஞ்சுஷா மேனன் தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததாக சில செய்திகள் கூறுகின்றன. நடிகை ரெஞ்சுஷா மேனன் இறப்பு குறித்து முதற்கட்ட முடிவு தற்கொலைதான் என்றாலும், அவரது மரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரெஞ்சுஷா மேனன், தொலைக்காட்சி தொடர்களில் ஈடுபடுவதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ‘ஸ்த்ரீ’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், மற்ற சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றார். ‘சிட்டி ஆஃப் காட்’, ‘மேரிக்குண்டொரு குஞ்சாடு’, ‘பாம்பே மார்ச்’, ‘கார்யஸ்தான்’, ‘ஒன் வே டிக்கெட்’, ‘அத்புத த்வீபு’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பல சீரியல்களில் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அதுமட்டுமின்றி, ரெஞ்சுஷா மேனன் ஒரு தொழில்முறை பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆவார்.
நடிகை ரெஞ்சுஷா மேனன் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ‘ஆனந்த ராகம்’ இணை நடிகை ஸ்ரீதேவி அனிலுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ஒரு வேடிக்கையான வீடியோவை வெளியிட்டார். நடிகையின் மறைவுக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.