குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் புதிதாக 10,000 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றி, ஏழை மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராமப்புற ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நிதி உதவி: ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். இந்தத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கூடுதலாக, தேவைப்பட்டால், பயனாளிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1.50 லட்சம் வரை கடன் பெறலாம்.
வீட்டின் அமைப்பு: வீடு கட்ட குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும். இதில், 300 சதுர அடி ஆர்சிசி கூரையுடனும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருட்களாலும் கட்டப்பட வேண்டும்.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் :
* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* சொந்தமாக வீட்டுமனைப் பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கூட்டு பட்டா வைத்திருந்தால், தனிப் பட்டாவாக மாற்றிய பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியற்றவர்கள்:
* ஏற்கனவே கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள்.
* வீட்டின் ஒரு பகுதி கான்கிரீட் அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரையால் அமைக்கப்பட்டிருப்பவர்கள்.
* அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த திட்டத்திற்கான பயனாளிகள், 3 விதமான கணக்கெடுப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள், தங்கள் பகுதியிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கிராம சபையின் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் ரேஷன் கார்டு, முகவரிச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், வீட்டுப் பட்டா மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தின் நிலையை https://www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
Read More : புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் என்ன ஆகும்..? அறிவியல் ரீதியான காரணம் தெரியுமா..?