பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மரணம், மஞ்சள் காமாலை குறித்த விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, அது ஒரு தீவிர நோயின் அறிகுறியே என மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடலில் உள்ள பழைய ரத்த சிவப்பணுக்கள் சிதைவடையும்போது, அதிலிருந்து ‘பிலிருபின்’ என்ற கழிவுப் பொருள் உருவாகிறது. இது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள ரத்த சிவப்பணுக்களின் சராசரி ஆயுட்காலம் 120 நாட்கள் ஆகும். இந்த அணுக்கள் பழையதாகும்போது, மண்ணீரல், கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களால் உடைக்கப்படுகின்றன. இந்த செயல்முறையின்போது, அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், பிலிருபினாக மாற்றப்படுகிறது. இந்தக் கழிவுப் பொருள் கல்லீரலுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பித்தநீருடன் கலந்து, இறுதியில் மலம் அல்லது சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும்.
மஞ்சள் நிறத்திற்கான காரணம் :
பிலிருபின் கழிவுப் பொருள் உடலில் இருந்து முறையாக வெளியேற்றப்படாமல், அதிகமாக தேங்கும்போதுதான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இதனால், தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. எனவே, மஞ்சள் காமாலை என்பது உடலில் ஏதோ ஒரு உள்ளுறுப்பில் பிரச்சனை இருப்பதற்கான ஒரு எச்சரிக்கை மணி.
மஞ்சள் காமாலை வர 3 முக்கியக் காரணங்கள் :
* கல்லீரல் நோய்
* பித்தநீர் அடைப்பு
* அதிகப்படியான ரத்த சிவப்பணுக்கள் சிதைவது
இவற்றில், நடிகர் ரோபோ சங்கரை பாதித்தது கல்லீரல் நோய்தான். கல்லீரல் பாதிப்படைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ போன்ற வைரஸ் தொற்றுகள், மருந்துகள் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரல் செல்களைத் தாக்குவது ஆகியவை பொதுவான காரணங்கள்.
ஆல்கஹால் ஹெபடைடிஸ் ஒரு முக்கியக் காரணம்
இவற்றையும் தாண்டி, கல்லீரல் பாதிப்புக்கான மற்றொரு மிக முக்கியமான காரணம் மது அருந்துதல் ஆகும். நாம் உட்கொள்ளும் எந்த உணவாக இருந்தாலும், அது கல்லீரலை கடந்தே செல்லும். மதுவும் அப்படித்தான். அதிக அளவில் மது அருந்தும்போது, அதன் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் நச்சுப் பொருட்கள் கல்லீரல் செல்களைப் பாதிக்கின்றன. இந்தக் கொழுப்பு படிவதையே ‘ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை, இறுதியில் கல்லீரல் முற்றிலுமாகச் செயலிழந்து, மரணத்தில் முடிவடையும்.
கல்லீரல் பாதிப்பை 3 வகைகளாகப் பிரிக்கலாம். ஆரம்ப நிலையில், அறிகுறிகள் தெரிந்த உடனேயே மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்தினால், கல்லீரலின் பாதிப்புகள் படிப்படியாக குறைய தொடங்கும். இரண்டாம் நிலையில், பாதிப்பின் அறிகுறிகள் அதிகமாகத் தென்பட்டாலும், முறையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் உயிர் பிழைக்க வாய்ப்புகள் அதிகம்.
ஆனால், கல்லீரல் இறுதி நிலைக்கு வரும்போது, அது முற்றிலுமாகச் செயலிழந்துவிடும். இந்த நிலையில், மது அருந்துவதை நிறுத்தினாலும் எந்த மாற்றமும் ஏற்படாது. மருந்துகள் மற்றும் உணவுகள் கூட உதவாது. இதற்கு ஒரே தீர்வு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான்.
ஆனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான ஒன்றாகும். ரத்த சம்பந்தமான உறவினர்களிடம் இருந்து மட்டுமே கல்லீரல் தானமாக பெற முடியும். குறிப்பாக, வயதானவர்களுக்கு கல்லீரல் தானம் செய்ய யாரும் எளிதில் முன்வருவதில்லை. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உடலை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.
ரோபோ சங்கரின் மரணம்
நடிகர் ரோபோ சங்கரின் மரணத்திற்கு, அவரது கல்லீரல் முழுவதுமாக செயலிழந்ததுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால், உடலில் நோய்த்தொற்று அதிகரிப்பது, உடல் உறுப்புகளில் நீர் தேங்குவது போன்ற பல சிக்கல்கள் ஏற்படும். இதன் காரணமாகவே, கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன. ரோபோ சங்கரின் மரணம், அதிகப்படியான மதுப் பழக்கம் கல்லீரலை எவ்வாறு கடுமையாகப் பாதித்து, உயிரைப் பறிக்கும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
Read More : “நான் உயிர் பிழைக்க காரணமே என் மனைவி, மகள் தான்”.!! உருக்கமாக பேசிய நடிகர் ரோபோ சங்கர்..!!