ஸ்டாண்ட் அப் காமெடியன், பல குரல் மன்னன், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.. ஆரம்ப காலத்தில் மேடையில் தனது மிமிக்ரி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்..
சின்னத்திரையில் கவனம் பெற்ற ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.. இதை தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.. முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் மாறினார்..
இதனிடையே கடந்த ஆண்டு திடீரென ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.. அதிக அளவு மது குடித்ததால் அவர் உடல் குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போனார்.. பின்னர் சிகிச்சை மூலம் குணமடைந்தார்.. பின்னர் உடல் நலம் தேறி மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வந்தார்..
இந்த நிலையில் 2 நாட்களுக்கு படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார்.
அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், ராதாரவி, சத்யராஜ் என பல நடிகர், நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், திருமாவளவ, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது.. இதை தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.. அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது..