நவீன தொழில்நுட்ப உலகில், நமது செல்போன் எண் என்பது அரசு சேவைகளை பெற முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து தகவல்களும், புதுப்பித்தல்களும், விதிகளும் நமது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குத்தான் நேரடியாக அனுப்பப்படுகின்றன. எனவே, நமது மொபைல் எண் மாறும்போது, அதை ஓட்டுநர் உரிமத்தில் புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், தற்போதைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசின் பல சேவைகள் இப்போது ஆன்லைனில் கிடைக்கின்றன. ஓட்டுநர் உரிமத்தில் மொபைல் எண்ணை மாற்றுவதும் எளிமையான ஆன்லைன் நடைமுறையாக உள்ளது. முதலில், சம்பந்தப்பட்ட மாநில போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பிரிவில், மொபைல் எண் புதுப்பித்தல் (Mobile Number Update) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து, உங்களது ஓட்டுநர் உரிம எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு, கணினியின் வழிகாட்டுதலின்படி proceed என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்த கட்டமாக, புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்து, ஏன் இந்த மாற்றம் தேவைப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.
புதிய எண்ணைப் பதிவு செய்தவுடன், அந்த எண்ணுக்கு OTP வரும். அந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்த்தவுடன், உங்களது மொபைல் எண் வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டுவிடும். பொதுவாக இந்த நடைமுறை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்புக்காக ஆதார் அங்கீகாரம் கேட்கப்படலாம்.
சில அரிதான சமயங்களில், ஆன்லைன் முறையில் சிக்கல்கள் ஏற்பட்டால், நீங்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் வசதி, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. எனவே, உங்கள் மொபைல் எண்ணை மாற்றும்போதெல்லாம், உடனடியாக உங்கள் டிரைவிங் லைசன்ஸ் உரிமத்திலும் அதை புதுப்பித்து, அரசின் முக்கியமான தகவல்களை தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.