சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வருவதால் பல பொருள்களின் விலை குறையவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்தது. இதன் அடிப்படையில், தற்போதைய நான்கு வகை வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன:
5% – அத்தியாவசியப் பொருட்கள்
18% – பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள்
40% – பிற பொருட்கள் (தூயிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் கேமிங் போன்றவை)
இந்த சீர்திருத்தம் வரி கணக்கிடுவதை எளிமைப்படுத்துவதோடு, நுகர்வோர் விலையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் ஏற்கனவே இந்தப் பயன்களை நுகர்வோருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்தநிலையில், இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அதில், ”ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பெண்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள், ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மூலம் மக்கள் குறைந்த செலவில் விருப்பமானதை வாங்க முடியும்.
நவராத்திரி தொடக்க நாளில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும். ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு ஜி.எஸ்.டி. வரி மூலம் நனவானது. இது இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகும். இதைப்போல இனி வரும் ஜி.எஸ்.டி. 2.0-வும் முக்கியமானது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்.
துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அவர்களை புதிய நடுத்தர வர்க்கம் என்ற அர்த்தத்தில் ‘நியோ மிடில் கிளாஸ்’ என்றார். இவர்கள் தங்களுக்கென லட்சியங்களையும் கனவுகளையும் கொண்டுள்ளனர் என்ற அவர், வருமான வரிவிலக்கு வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தியது, நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இதனால் வாழ்க்கை எளிதாகவும் வசதியாகவும் மாறும்” என்றும் அவர் தெரிவித்தார்.
விலை குறையும் பொருட்கள்:
அத்தியாவசியப் பொருட்கள் (12% → 5%): பேஸ்ட், சோப்பு, ஷாம்பு, பிஸ்கட், ஸ்நாக்ஸ், ஜூஸ் போன்ற பேக்கேஜ்டு உணவுப் பொருட்கள், நெய், கன்டென்ஸ்டு பால், மிதிவண்டிகள், எழுதுப்பொருட்கள், குறைந்த விலை ஆடைகள், காலணிகள்.
மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் (28% → 18%):ஏர் கண்டிஷனர், ஃப்ரிட்ஜ், டிஷ்வாஷர், பெரிய திரை டிவிகள், சிமெண்டு.
ஆட்டோமொபைல் துறை: சிறிய கார்கள் (எஞ்சின் 1200cc-க்கு குறைவாக) 28% இலிருந்து 18%க்கு குறையும்,
இருசக்கர வாகனங்களும் குறைந்த வரியில் வரும், பெரிய கார்கள், சொகுசு எஸ்யூவிகள் முந்தைய உயர் வரியிலேயே தொடரும்,
காப்பீடு மற்றும் நிதிச் சேவைகள்: தற்போதைய 18% வரி குறைக்கப்படவோ, சில பிரிவுகள் விலக்கு பெறவோ வாய்ப்பு உள்ளது.
விலை அதிகரிக்கும் பொருட்கள்: புகையிலை பொருட்கள், மதுபானம், பான் மசாலா, ஆன்லைன் பந்தயம், கேமிங் பிளாட்ஃபார்ம்கள். எரிபொருட்கள் இன்னும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால் அதன் விலையில் மாற்றமில்லை. வைரங்கள், விலையுயர்ந்த கற்கள் போன்ற ஆபரண பொருட்கள் முந்தைய வரியிலேயே தொடரும்.



