பொதுவாக சிரிப்புக்கான விஷயமாக கருதப்படும் குறட்டை, உண்மையில் இதய ஆரோக்கியத்திற்கான ஒரு தீவிர எச்சரிக்கை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தில் ஏற்படும் இந்த ஒலி, பல நேரங்களில் ‘தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறல்’ (Obstructive Sleep Apnea – OSA) எனப்படும் கடுமையான தூக்கக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “குறட்டை என்பது நல்ல தூக்கத்தின் அடையாளம் அல்ல” என்றும், இது இரவில் சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில், இது இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
OSA மற்றும் அதன் பாதிப்புகள் என்ன..?
OSA பிரச்சனை உள்ளவர்கள், தூக்கத்தில் சுவாசிப்பதில் சிரமப்படுவார்கள். இதன் விளைவாக, அவர்களுக்கு பகல் நேரத்தில் சோர்வு, கவனக்குறைவு, மனச்சோர்வு மற்றும் இதயப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பல நேரங்களில், இந்த அறிகுறிகளை மக்கள் வேறு காரணங்களுடன் தொடர்புபடுத்தி தவறாக புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக, பகல்நேர சோர்வை அதிக வேலைப்பளு என்றும், காலை தலைவலியை தலையணை பிரச்சனை என்றும் நினைப்பார்கள். ஆனால், இவை அனைத்தும் OSA-வின் முக்கிய அறிகுறிகளாக கூட இருக்கலாம்.
உடல் பருமன் மற்றும் தீர்வுகள் :
உடல் பருமன், OSA-வின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. கழுத்து மற்றும் சுவாசப் பாதையில் கொழுப்பு படிவதால், சுவாசம் தடைபடுகிறது. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் குறட்டை விட்டால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். நீங்கள் சத்தமாகக் குறட்டை விடுபவராகவும், உடல் எடை அதிகமாகவும், பகல் நேரத்தில் சோர்வாகவும் இருந்தால், உடனடியாக ஒரு தூக்க ஆய்வு (Sleep Study) செய்துகொள்வது அவசியம்.
OSA கண்டறியப்பட்டால், எடை குறைப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை அல்லது CPAP இயந்திரம் போன்ற சிகிச்சை முறைகள் மூலம் இந்த சிக்கலை சமாளிக்க முடியும். ஆகவே, குறட்டை என்பது வெறும் சத்தமல்ல.. அது உங்கள் இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கான ஒரு அவசர அழைப்பு. அதை அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவதே உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் ஒரே வழி.



