பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கின் மாத்ரே தாரா கிராமத்தில், இன்று பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. அதிகாலை 2 மணியளவில், நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் JF-17 போர் விமானங்கள் எட்டு LS-6 ரக குண்டுகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கிராமத்தின் பெரும் பகுதி அழிந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்படையினர் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அஞ்சப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்தது. மலைகளால் சூழப்பட்ட காரணத்தால், இந்த மாகாணம் பயங்கரவாத குழுக்களுக்கு இயற்கை மறைவிடம் ஆகும். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, கைபர் பக்துன்க்வாவில் 605 பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றுள்ளன; இதில் 139-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 79 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பாகிஸ்தானில் செயல்படும் பல பயங்கரவாத குழுக்கள் தங்களது தளத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றியுள்ளார்கள், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் தற்போது பயங்கரவாத செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.