இந்தியா, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சில இடங்களில் இன்னும் நரபலி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2014 முதல் 2021 வரை, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட நரபலிகள் மற்றும் 397 சூனியம் தொடர்பான கொலைகள் நடந்துள்ளன.
இவ்வளவு ஏன், கல்வியில் சிறந்து விளங்கும் கேரளாவில், பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் மந்திரவாதியுடன் இணைந்து, இரண்டு பெண்களைக் கொன்று குக்கரில் சமைத்த சம்பவம், கடந்த ஆண்டு நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், கோவை மற்றும் நாமக்கல்லில் அடுத்தடுத்து நடந்த மர்ம சம்பவங்கள் கேரளாவைப் போல, தமிழ்நாட்டிலும் நரபலி சம்பவங்கள் நடக்கத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த வாரம், கோவையில் உள்ள தண்டவாளத்தில், ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்திற்கு அருகே மஞ்சள், குங்குமம், ரத்தம் மற்றும் வெட்டப்பட்ட கோழியின் உடல் கிடந்தது, இது ஒரு நரபலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது. போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடு கட்டும் பணிக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலுக்கு அடியில், பிறந்த சில மணி நேரங்களே ஆன ஒரு பச்சிளம் ஆண் குழந்தை, தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்டு இருந்தது.
நரபலியா? கருக்கலைப்பா?
குறிப்பாக, குழந்தை புதைக்கப்பட்ட அன்று மகாளய அமாவாசை என்பதால், இது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள், நவீன சமூகத்தில் இன்னும் நிலவி வரும் மூடநம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.



