புதையல் வேட்டை என்பது காலம் காலமாக மக்களை ஈர்க்கும் ஒரு விஷயமாகும். கடந்த கால பேரரசுகளின் பொக்கிஷங்கள், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் என உலக வரலாற்றில் பல மர்மமான புதையல்கள் மறைந்திருக்கின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத சில முக்கியமான புதையல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
டாப்லிட்ஸ் ஏரியின் தங்கப் புதையல் : இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜிக்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தங்கம், நகைகள் மற்றும் தங்க நாணயங்களை ஆஸ்திரிய ஆல்ப்ஸில் உள்ள டாப்லிட்ஸ் ஏரியில் வீசியதாக வதந்திகள் உள்ளன. இந்த ஆழமான ஏரியில், புதையலை மீட்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை யாரும் வெற்றி பெறவில்லை.
நாஜிக்களின் தங்கப் புதையல் : இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்கள் கொள்ளையடித்த தங்கம், கலைப் பொருட்கள் மற்றும் நாணயங்கள் எனப் பல பொக்கிஷங்கள், உலகின் பல்வேறு ரகசிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அமெரிக்கப் படை ஜெர்மனியில் உள்ள ஒரு சுரங்கத்தில், பெரும் அளவிலான தங்கப் புதையலைக் கண்டுபிடித்தாலும், இன்னும் பல புதையல்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன.
Ark of the Covenant : 10 கட்டளைகள் எழுதப்பட்ட கல் பலகைகளைக் கொண்டதாக பைபிளில் விவரிக்கப்படும் இந்த தங்கப் பெட்டி, கி.மு. 587-ல் பாபிலோனியர்களால் ஜெருசலேம் அழிக்கப்பட்ட பிறகு மறைந்து போனதாக கூறப்படுகிறது. அதன் இருப்பிடம் குறித்துப் பல கட்டுக்கதைகள் நிலவினாலும், எந்தத் தொல்லியல் ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
ஃபேபர்கே முட்டைகள் : ரஷ்ய ஜார் மன்னர்களுக்காக ஃபேபர்கே என்ற நகை வியாபாரி, விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ரத்தின கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்ட 50 முட்டைகளை உருவாக்கினார். ஒவ்வொன்றிலும் உள்ளே ஒரு தங்கக் கோழி போன்ற மறைக்கப்பட்ட ஆச்சரியங்கள் இருந்தன. இருப்பினும், அந்த 50 முட்டைகளில் 6 முட்டைகள் காணாமல் போயின.
கிங் ஜானின் நகைகள் மற்றும் ஐரிஷ் கிரீட நகைகள் : கிங் ஜான் 1216-ல் இங்கிலாந்தைக் கடக்கும்போது தனது நகைகளையும், அரச உடைமைகளையும் இழந்தார். அவை நீருக்கடியில் மறைந்துபோனது. அதேபோல, 1907ஆம் ஆண்டு டப்ளின் கோட்டையில் இருந்த அயர்லாந்தின் கிரீட நகைகள், மர்மமான முறையில் காணாமல் போயின. இந்த இரண்டு புதையல்களும் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டாலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
The Holy Grail மற்றும் சீனாவின் இம்பீரியல் முத்திரை : மத நம்பிக்கையாளர்கள் மற்றும் புதையல் வேட்டைக்காரர்கள் என அனைவருக்கும் முக்கியமான The Holy Grail (இயேசு பயன்படுத்திய கோப்பை) மற்றும் சீனாவின் முதல் பேரரசரின் இம்பீரியல் முத்திரை ஆகியவையும் வரலாற்றில் தொலைந்து போன முக்கியப் புதையல்களில் அடங்கும்.