திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 11-ம் வகுப்பு மாணவனுக்கு அவரது கணித ஆசிரியை தனது ஆபாசப் படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், மாணவரின் தந்தை தனது மகனின் செல்போனை சோதித்து பார்த்துள்ளார். அப்போது, அதில் இருந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த புகைப்படங்கள் ஆபாசமானதாகவும், மகனின் கணித ஆசிரியை ஆதீஸின் (30) படங்களும் இருந்தன. இதுகுறித்து மகனிடம் விசாரித்தபோது, அந்தப் படங்களை தனது கணித ஆசிரியைதான் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதாக மாணவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, மாணவரின் தந்தை உடனடியாக திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியை ஆதீஸை கைது செய்தனர். ஆதீஸ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் அத்துமீறல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் குழந்தைகளின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஆசிரியர்களின் நடத்தை குறித்து பள்ளிகள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.