கோயிலுக்கு செல்வது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, முழுமுதற் கடவுளான விநாயகரை தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொண்டு வணங்க வேண்டும். பெருமாள் கோயிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை தரிசித்த பின்னரே பெருமாளை வணங்க வேண்டும். ஆனால், சிவன் கோயிலுக்கு செல்லும் முறை சற்று வேறுபட்டது.
சிவன் கோயிலில் வழிபாடு :
சிவன் கோயிலில் முதலில் சிவபெருமானை வணங்கிய பின்னரே அம்பாளை தரிசிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் வலம் வருவது, மற்ற நாட்களில் வழிபடுவது என சில விதிமுறைகள் உள்ளன. சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக் கூடாது. சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு, கைகளைக் காட்டிச் செல்வது போன்ற சில சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
அதேபோல், சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். எனவே, பிரசாதத்தைத் தவிர வேறு எந்த ஒரு பொருளையும், ஏன் ஒரு சிறு துரும்பை கூட கோயிலிலிருந்து எடுத்துச் செல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால், கோயிலில் இருந்து புறப்படுவதற்கு முன் சிறிது நேரம் அமர்ந்து, நம் உடையில் ஒட்டியிருக்கும் தூசியைத் தட்டிவிட்டு வர வேண்டும். மேலும், சிவகணங்கள் நம்முடன் வராமல் இருக்கவும், நவக்கிரகங்கள் நம்முடன் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்ல வேண்டும்.
சண்டிகேஸ்வரர் வழிபாடு :
சிவன் கோயிலில் வழிபட்ட பிறகு, செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, சண்டிகேஸ்வரர் சன்னதியில் வழிபடுவது. பொதுவாக, பலர் அங்கு கைகளைத் தட்டி சத்தம் எழுப்பி வழிபடுவார்கள். ஆனால், சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். எனவே, அவரை அமைதியாகவே வணங்க வேண்டும்.
“நான் ஆலய தரிசனத்தை சிறப்பாக முடித்துவிட்டேன்” என்று மனதுக்குள் நினைத்து வணங்கினாலே போதுமானது. அவருக்கு வஸ்திரம் வைத்து வழிபட்டால், குடும்பத்தில் வஸ்திரப் பஞ்சம் வராது. மேலும், சுப காரியத் தடைகளும் நீங்கும். வில்வம் இலைகளால் அர்ச்சனை செய்தால், வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Read More : சனி தோஷம் நீங்கும் அதிசய கோயில்.. லட்சக்கணக்கானோர் வருகை தரும் திருநள்ளாறு ரகசியம்..!



