கடந்த 2011இல் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாந்தினி அந்தப் புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டன் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், நான் 3 முறை கர்ப்பமானேன். மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, ஒவ்வொரு முறையும் கருக்கலைப்பு செய்ய மணிகண்டன் வற்புறுத்தினார். ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்திருந்தார். நடிகையின் இந்தக் குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, பல நீதிமன்றங்களில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தும் நிராகரிக்கப்பட்டதால், தலைமறைவாக இருந்த அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அமைச்சர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சாந்தினி உச்சநீதிமன்றத்தில் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்றத்தில் சமரசம் செய்துவிட்டதாக தெரிவித்தது. இதற்கு சாந்தினி தரப்பு மறுப்பு தெரிவித்தபோதும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏன் மனுத் தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இறுதியில், மணிகண்டனின் ஜாமீனை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை 3 ஆண்டுகளாக ஏன் பட்டியலிடாமல் இருந்தீர்கள் என நீதிமன்றப் பதிவாளரிடமும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



