நவராத்திரி வழிபாட்டில் சந்திரகாண்டா அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. நவராத்திரியின் மூன்றாம் நாளுக்கு உரிய துர்க்கை ரூபம் தமிழில் சந்திரகாந்தா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறது. மாதா சந்திரகாண்டா தேவியை வழிபடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க சந்திரகாண்டாவை வணங்கலாம்.
யுத்தத்தில் வெற்றி தரும் கருணை வடிவாக அம்மா சந்திரகாண்டாவை போற்றுவர். சந்திரன் என்றால் மதி அல்லது பிறை. காண்டா என்றால் கோவில் மணி என்று பொருள். அன்னை சந்திரகாண்டா மூன்றாம் பிறையை அணிகலனாக அணிந்துள்ளார்; அது மணி போன்ற வடிவத்தில் உள்ளது. எனவே சந்திரகாண்டா என்ற சொல்லுக்கு பிறை அணிந்த தேவி என்று பொருள்படும். இது எதை குறிக்கிறதென்றால், சரியான நேரத்தில் மதி எனும் அறிவு, கடிகார நினைவு தரும் ஒரு மணி ஓசையை போல் செயல்பட்டு நமக்கு விழிப்புணர்வு தந்தால் வாழ்வில் வெற்றி வந்தடையும்.
சந்திரகாண்டா யார்? அம்மா மலைமகள், மூன்றாம் நாள் நவராத்திரி அன்று அம்மா சந்திரகாண்டா எனும் நிலையில் அருளுகிறாள். சிவசக்தி திருமணம் நடைபெற துவங்குகிறது. அங்கே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தேவர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பூத கணங்கள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் என பெரும் கூட்டம். இவர்கள் அனைவரையும் பெரும்திரள் என பார்த்து அன்னை பார்வதியின் தாயார் மைனா, மயங்கி விழுந்து விடுகிறார். தனது தாயை உயிர்ப்பிக்கவும், சிவபெருமானின் அருள் நிலையை அவர்களுக்கு உணர்த்தவும் அம்மா பார்வதி சந்திரகாண்டா வடிவத்தில் அருளுகிறார்.
மாதா சந்திரகாண்டா அன்னை பார்வதியின் திருமண வடிவமாகும். அவளுக்கு பத்து கைகள் உள்ளன. அவற்றில் திரிசூலம், கதை, வில், அம்பு, வாள், தாமரை, மணி, கும்பம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மீதம் உள்ள இரு கைகளில் அபய வரத முத்திரை காட்டி, கவலைப்படாதே அம்மா இருக்கிறேன் என நமக்கு உணர்த்துகிறாள். துணிச்சல் மற்றும் தைரியத்தைக் குறிக்கும் வகையில் புலி மீது சவாரி செய்கிறாள். அரை நிலவு அவரது நெற்றியில் அணிகலன். மூன்றாவது கண் அவரது நெற்றியின் நடுவில் ஞானத்தை தருகிறது. தங்க நிறத்தை கொண்டவர் நம் அன்னை.