தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, இது குறித்த தனது இறுதி அறிக்கையை வரும் செப்.30-ஆம் தேதி அரசுக்குச் சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு மற்றும் எதிர்பார்ப்புகள் :
கடந்த 2003ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. ஆனால், மத்திய அரசின் மாற்றங்களுக்கு பிறகு, நாடு முழுவதும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இது அரசு ஊழியர்களுக்குப் பாதகமானது என பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்து வருகிறது. திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், 4 ஆண்டுகள் ஆட்சி முடிவடைந்தும் அது குறித்த அறிவிப்பு வெளியாகாததால், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இக்குழு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டதுடன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சந்தித்துக் கருத்துக்களையும் கேட்டறிந்தது. இக்குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தீபாவளிக்கு வெளியாகும் அறிவிப்பு..?
இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு உள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீபாவளிப் பரிசாக அக்டோபர் முதல் வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அதிசய நிகழ்வு..!! இந்த 3 ராசிக்காரர்களுக்கும் ஜாக்பாட் அடிக்கப்போகுது..!!



