கன்னியாகுமரி மாவட்டம் ராணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன். இவர் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ரூபி ஆன்றணி, இரண்டு மகள்களுடன் அங்கு வசித்து வருகிறார். நேற்று காலை, ரூபி தன்னுடைய இளைய மகளுடன் தேவாலயத்திற்கு சென்றிருந்தார்.
வீட்டில் தனியாக இருந்த மூத்த மகள் அஸ்வினி(19) பெட்ரோலை மேலே ஊற்றி தீவைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, அவர் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தாய் ரூபி, மகளை இழந்த வேதனையில் கதறி அழுதார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது.
போலீசார் அளித்த தகவலின்படி, அஸ்வினி நாகர்கோவிலில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சில காலமாக அவர் முடி உதிர்வு பிரச்சனை காரணமாக நாகர்கோவிலில் உள்ள அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அதனுடன் தொடர்ந்து தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டதால், கடந்த வாரம் மருத்துவ சிகிச்சையும் பெற்றிருந்தார்.
இந்த உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதன் விளைவாக வீட்டில் பைக்கிற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.