2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது..
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.. பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பால சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது..
அந்த வகையில் 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. அதில் 2021-ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத்துறை பிரிவில் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குனர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத்துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமி உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன..
2023-ம் ஆண்டுக்கான விருதுகளில் திரைத்துறையில் நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர் நிகில் முருகன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இசைப்பிரிவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் கே.ஜே யேசுதாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. சிறந்த கலைமன்றமாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றமும், சிறந்த நாடக குழுவாக மதுரை எம்.ஆர். முத்து நினைவு நாடக மன்றமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.. சின்னத்திரை நடிகர்கள் பி.கே கமலேஷ், நடிகை ஜெயா வி.சி குகநாதன், மெட்டி ஒலி காய்த்ரி ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..
கலைமாமணி விருதாளார்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடுத்த மாதம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது, பட்டயம் வழங்கப்படும்.. சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது..