KPY பாலா-க்கு பணம் எங்கிருந்து வருகிறது..? இணையத்தில் வெடித்த சர்ச்சை.. லெப்ட் ரைட் வாங்கிய சீமான்..!

seeman kpy bala 1

விஜய் டிவி புகழ் பாலா, ஏழை மக்களுக்கு உதவி செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அவருக்கு பணம் எப்படி வருகிறது என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் வெளிநாட்டு கைக்கூலி என பத்திரிகையாளர் ஒருவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில்,” பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ வழி ஏற்படுத்தித் தரும் தம்பி பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்குரியது.

வறுமையில் வாடும் மக்களுக்கு தம்பி பாலா தம்மால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகின்றார். நாம் அதனை வாழ்த்தி, வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்தால் அவரைப்போல தாமும் உதவிகள் செய்ய வேண்டும். மாறாக உதவி செய்பவர்கள் புகழ் பெறுகிறாரே என்று பொறாமை கொள்வதும், அவருக்கு கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகளை அள்ளித்தெளிப்பதும் தரம் தாழ்ந்த இழிச்செயலாகும். தம்பி பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாக சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒருவர் தன்னலமற்று தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் எத்தனை எத்தனை கேள்விகள்? உதவி செய்கின்றவருக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது. அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி. எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்? உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது?

இந்த நாட்டில் உளவுத்துறை உள்ளது. பாதுகாப்பு முகமை உள்ளது. வருமானவரித்துறை உள்ளது. சிறப்புப் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை உள்ளது. அது அவர்களுடைய வேலை, அவர்களுடைய கவலை. உங்களுக்கு என்ன கவலை? எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? அவர் எப்படி மருத்துவமனை கட்டுகிறார்? என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்வது ஏன்? இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க? எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க? அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன்?

தம்பி பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அரசும், அது சார்ந்த நிர்வாக அமைப்புகளும்தான். உங்களுக்கு என்ன வேலை அதில்? ஏனென்றால், இப்போது தம்பி பாலாவை பற்றிப் பேசினால்தான் உங்களுக்கு வருமானம் வரும்? நீங்கள்தான் தம்பி பாலாவை பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள். மற்றவர் கண்ணீரைத் துடைத்து உதவ வரும் இளம்பிள்ளைகளை வருமுன்னே இப்படி கசக்கித் தூரப்போட்டீர்கள் என்றால், இனி வருங்காலத்தில் இதுபோல யார் உதவ முன்வருவார்கள்? பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள்.

போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள். இப்பொழுது தம்பி பாலாவை பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன? இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு அருவருப்பான சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற நடுக்கம் வருகின்றது. யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதில் குறை சொல்பவர்கள், அவர்கள் இதுவரை மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் என்ன? என்ற கேள்விக்கு பதில் தருவார்களா?

அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு. தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணை நிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ‘அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்!’ என்ற நம் அறிவு மூதாட்டி ஔவையின் வார்த்தையை உச்சரித்துக்கொண்டே முன்னேறிச் சென்றுகொண்டே இரு! மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள்! அதனால்தான் உன்னை விரும்புகிறார்கள்!” என கூறியுள்ளார்.

Read more: 30 நாட்களில் ரூ.23 கோடி பணம் அபேஸ்! ED, CBI அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் குற்றவாளிகள்.. என்ன நடந்தது..?

English Summary

Where does KPY Bala get the money from? Controversy erupts on the internet.. Seeman who bought the left right..!

Next Post

தவெக தொடர்ந்த வழக்கு.. விதிகள் வகுக்க அக்.16 வரை அரசுக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்..!

Wed Sep 24 , 2025
விஜய் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு தொடர்ந்துள்ளது.. இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகளுக்கு இல்லாத நிபந்தனைகளை தவெகவுக்கு விதிப்பதாக கூறினார்.. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என்று நாங்கள் எப்படி […]
madras hc vijay 02 1758191774 1

You May Like