தைவானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தைவானில் ரகசா சூறாவளியால் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர் கடும் மழையால் மலை பகுதியில் அமைந்த நீர்நிலை ஒன்று உடைந்தது. பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது. ஒலிம்பிக் நீச்சல் குளம் போன்று 36 ஆயிரம் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு அந்த ஏரியின் நீர் கொள்ளவு 91 மில்லியன் டன்னாக உள்ளது.
ஏரியில் இருந்த வெள்ள நீர் குவாங்பு நகருக்குள் புகுந்து நகரையே புரட்டி போட்டது. இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 124 பேரை காணவில்லை. வீடுகள், குடியிருப்புகள் என கிராமம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், குடியிருப்புவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பரிதவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் இந்த சக்திவாய்ந்த புயல் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சீனாவின் கடற்கரையைத் தாக்கிய வலிமையான சூறாவளியாக விவரிக்கப்படும் ரகாசா, இந்த பருவத்தின் 18வது சூறாவளியாகும், 2009 ஆம் ஆண்டு மொராகோட் புயல் தாக்கியதில் தெற்கு தைவான் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. 700 பேர் உயிரிழந்தனர். 300 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.