விசிக தலைவர் திருமாவளவன் இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது விஜய்யின் தவெக விசிகவின் வாக்குகளை பிரிக்கப் போகிறது என்ற கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதிலளித்த திருமாவளவன் “ இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.. இப்படி சொல்வதன் மூலம் விசிக உணர்ச்சி வயப்படும், திருமாவளவன் உணர்ச்சி வயப்படுவார்.. வார்த்தைகளை விட்டுவிடுவார் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கிறார்.. விஜய் ஒரு சினிமா நடிகர்.. அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது..
விசிகவின் கொள்கைகளை புரிந்து கொண்டு, அதன் கொள்கைகளை பின்பற்றும் யாரும் நடிகர்களின் கவர்ச்சி அரசியலுக்கு இரையாகமாட்டார்கள்.. நடிகர் விஜய்காந்த் கட்சி தொடங்கிய போதும் இதே கருத்து பரப்பப்பட்டது.. பாமகவில் இருந்தும், விசிகவில் இருந்தும் தான் நிறைய பேர் விஜய்காந்த் கட்சிக்கு போவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனால் அதை தாண்டி பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்தது.. வலுவோடு இருக்கிறது என்பது தான் உண்மை. அதே போன்றொரு பிரமையை இப்போது உருவாக்குகிறார்கள். அவர் வளரட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து தான் எல்லோரும் வெளியேறுகிறார்கள்.. குறிப்பிட்ட கட்சியில் இருந்து தான் ஒரு கட்சிக்கு போகிறார்கள் என்பது தவறான கருத்து..
வெறும் சினிமா கவர்ச்சியை நம்பி, ஒரு தலைமையை வேண்டாம் என்று ஒரு இளைஞன் போகிறான் என்றால் அந்த இளைஞன் என்னோடு இருப்பதில் எந்த பயனும் இல்லை.. எந்த பொருளும் இல்லை.. விசிகவில் எனது தலைமையை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் என்றால், நான் பேசும் அரசியலை உள்வாங்கிக் கொண்டு, அது சரி என்று ஒப்புக்கொண்டு பின்பற்றி வர வேண்டும். அப்பட்டிப்பட்டவர்களை தான் நான் சிறுத்தைகளாக மதிக்கிறேன்.. ஏற்கிறேன்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ அதிமுகவும், தவெகவும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எந்த உத்தியை செயல்படுத்தினாலும் அது சரிதான்.. ஆனால் இந்த இரு கட்சிகளுக்குமே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, திமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள்.. இந்த செயல்திட்டம் பாஜகவின் செயல்திட்டம்.. பாஜக , ஆர்.எஸ்.எஸ் இங்கு வலிமை பெற முடியாது.. ஆட்சிக்கு வர முடியாது.. திமுகவுக்கு மாற்றாக அதிகாரத்திற்கு வந்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொண்டு, திமுகவையும், அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும், தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை பலவீனப்படுத்த வேண்டும்.
தமிழக அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.. தவெகவாகவும் இருந்தாலும் சரி, நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், திமுகவையும் அதிமுகவையும் மாற்றக் கூடிய இடத்தில் அவர்கள் இல்லை.. ஆட்சியமைக்க கூடிய வலிமையில் அவர்கள் இல்லை.. திமுகவை, திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து பலவீனப்படுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி எண்ணிக்கையை குறைப்பது தான் அவர்களின் நோக்கம்.. இது ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு துணைப் போகும் செயல்திட்டம்.. அதிமுகவிற்கும் இதே எண்ணம் தான் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இந்த தேர்தலில் பாஜக கணிசமாக வெற்றி பெறும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற வேண்டும். அதற்கு தவெக, நாம் தமிழர், அதிமுக ஆகிய கட்சிகள் துணை போகின்றன.. அது தான் உண்மை.. விசிகவை விமர்சிப்பது என்பது, திமுக கூட்டணியை பலவீனப்படுத்த விசிகவை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்..
இதன் மூலம் திமுக – விசிக இடையே முரண்பாட்டை உருவாக்குவது. அதன் மூலம் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.. அதற்கு நாங்கள் ஏன் இரையாக முடியும்.? அப்படிப்பட்ட வரலாற்று துரோகத்திற்கு வழிவகுக்க முடியும்..
அவர்கள் பேசும் அரசியல் ஆபத்தானது . திராவிட அரசியலே தவறு, பெரியார் தவறு என்று பேசுவது ஆபத்தானது. திராவிடம் என்பது எந்த சூழலிலும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக இருந்ததில்லை இருக்காது.. அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறதோ இல்லையோ.. அதிமுகவுக்கு இருக்கிறதோ இல்லையோ விசிகவுக்கு இருக்கிறது.. திராவிட கருத்தியலை, பெரியார் கருத்தியலை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை கருத்தியல் ரீதியாக எதிர்க்க தயாராக இருக்கிறோம்.. அவர்களை அம்பலப்படுத்துவோம்..” என்று தெரிவித்தார்..
Read More : “வதந்திகளை பரப்பாதீங்க.. வேதனை அளிக்கிறது..” விரக்தியில் செங்கோட்டையன்.. என்ன விஷயம்..?