சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டங்களின் சிறப்புகள், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அரசின் திட்டங்களால் பயனடைந்த மாணவிகள் தங்கள் நன்றியை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக் கொண்டனர்..
அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த தென்காசியை சேர்ந்த பிரேமா என்ற மாணவி ஒருவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய அவர் “ நான் முதல்வன் திட்டத்தால் தற்போது நான் செமி கண்டக்டர் தொடர்பான ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.. என் அப்பா என்னை படிக்க வைத்த போது பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டனர்.. ஆனால் என் பிள்ளை சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று என்னை படிக்க வைத்தார்.. பெண் பிள்ளைகள் படித்தால் என்ன நடக்கும் என்பதற்கு நான் தான் சாட்சி.. நான் முதல்வன் திட்டம் இல்லை என்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது.. என் முதல் மாத சம்பளத்தை என் அப்பா கையில் கொடுக்க வேண்டும்.. என்று கொண்டு வந்திருக்கிறேன்..” என்று நெகிழ்ச்சி உடன் பேசினார். மேடைக்கு வந்த தனது தந்தையிடம் தனது முதல் மாத சம்பளத்தை கொடுத்த அந்த மாணவி என் அப்பா இனி எதற்கும் கவலைப்படக் கூடாது..” என்று கூறினார்.. இந்த மாணவியின் பேச்சு அரங்கில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
இந்த நிலையில் மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்! எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்! உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..