பொதுவாக, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநல பிரச்சனைகள் வரை பல உடல்நலக் கோளாறுகளுடன் குடல் நேரடியாகத் தொடர்புடையது. இதுகுறித்து எய்ம்ஸ், ஹார்வர்டு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, குடல் அமைப்பைச் சிறப்பாக செயல்பட வைப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார்.
கழிப்பறைப் பழக்கமும், மூலநோயும் : கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருப்பது, மூலநோய் அபாயத்தை அதிகரிக்கும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வயது வந்த 20 பேரில் ஒருவருக்கு மூலநோய் ஏற்படுகிறது.
நார்ச்சத்து போதுமான அளவு இல்லாததே இந்த நிலைக்கான முக்கியக் காரணமாகும். ஆரோக்கியமான குடல் பழக்கத்தின் அறிகுறி, வாரத்திற்கு 3 முறை முதல் ஒரு நாளைக்கு 3 முறை வரை மலம் கழிப்பது சாதாரணமானது தான்.
உணவுக் கட்டுப்பாடு அவசியம் : குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களைக் குறைத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். இந்த வகையான உணவுகள் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை. நார்ச்சத்து நிறைந்த மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடுவது குடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
நார்ச்சத்துக்கான எளிய வழி :
அமெரிக்காவில் ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 15 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்கிறார்கள். இதை அதிகரிக்க, வெறும் 1 முதல் 2 தேக்கரண்டி சியா விதைகள் அல்லது ஆளி விதைகள் ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இவை நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகளை வழங்குகின்றன. இந்த விதைகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரித்து, உடலில் வீக்கத்தை குறைக்கும் மற்றும் செரிமானத்தை சீராக்கும் என்று டாக்டர் சேத்தி தெரிவித்துள்ளார்.