தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வறுமையை குறைத்து தொழில்முனைவோராக ஊக்குவிக்க, சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் நலிவடைந்த பழங்குடியினர் போன்றோரையும் இந்த இயக்கம் உள்ளடக்கியுள்ளது.
ரூ. 40,000 கடன் உதவி :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் (ஆண்/பெண்) மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தனிநபர் ஒருவருக்கு ரூ.40,000 வீதம் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6,000 பேருக்கு கடனுதவி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் :
* மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர்/கணவர்/மனைவி ஆகியோர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
* திருநங்கையர்கள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழில் செய்ய விருப்பமுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த கடனுதவி வழங்கப்படும்.
* விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், ஊரகப் பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், தனிநபர் பெயரில் வங்கிக் கணக்கு வைத்திருப்பதும் அவசியம்.
* மாற்றுத்திறனாளிகள் UDID அடையாள அட்டையையும், திருநங்கையர்கள் சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டையையும் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்த வட்டி விகிதம் :
மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக கருதப்படுவதால், இந்தத் திட்டத்தில் பிணையம் இல்லாமல் ரூ.40 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கான வட்டி விகிதம் வெறும் 6% ஆகும். இது 12 முதல் 24 மாத தவணையில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். உணவுப் பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படும். கடன் தொகையை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால், மீண்டும் வங்கிக் கடனுதவி பெற்றுத்தரப்படும் வாய்ப்பு உள்ளது.
இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள், தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர்களை தொடர்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 155330 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
Read More : மாணவிகளே.. உங்களுக்கும் ரூ.1,000 வேண்டுமா..? விண்ணப்பிப்பது எப்படி..? யாரெல்லாம் தகுதியானவர்கள்..?